People following ThalaivarPeople following THALAIVAR
Thalaivar Image deco images
Thalaivar Image deco images
Thalaivar Image deco images

தீர்மானங்கள்

தீர்க்கமான அம்சங்களுடன் கூடிய முன்னெடுப்புகளையும் தீர்வுகளையும் வழியுறுத்துவதே தமிழக வெற்றிக் கழகத்தின் தீர்மானங்கள்.

Thalaivar Vijay

ஆண்டு:

அனைத்து ஆண்டுகள் (2)

மாதம்:

அனைத்து மாதங்கள்

தமிழ்நாடு எப்போதும் மதச்சார்பற்ற பூமி. சமூக நல்லிணக்கம் போற்றும் மண். சகோதரத்துவம் பேணும் மாநிலம். இங்கு விஷத்தையோ விஷமத்தையோ விதைத்தால் அந்த முயற்சி துளியளவுகூடத் துளிர்க்காது. எங்கள் கொள்கைத் தலைவரான தந்தை பெரியார், மிகப் பெரிய சமூகச் சீர்திருத்தவாதி. சமூக நீதிக் காவலர். இட ஒதுக்கீட்டுக்கான பாதையைச் சமைத்த முன்னோடிகளில் ஒருவர். பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பது எனச் சமூக நலன்சார்ந்த பல்வேறு இலக்குகளுக்காக வாழ்நாள் எல்லாம் உழைத்தவர். அவரைக் கடவுள் மறுப்புக் கொள்கை என்ற ஒற்றை வளையத்துக்குள் மட்டும் அடைக்கும் வேலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெரியாரைச் சிறுமைப்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் இந்த மண்ணில் வெற்றி பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். பெரியாரோடு நிற்காமல், கனிவின் திருவுருவான பேரறிஞர் அண்ணாவையும் அவதூறு செய்யும் முயற்சியை மதுரை நிகழ்ச்சியில் பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது.

தமிழ், தமிழர், தமிழ்நாட்டிற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அரும்பெரும் மனிதர், தலைவர் அறிஞர் அண்ணா. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தாரக மந்திரத்தைச் சமூக நல்லிணக்கத்திற்காக இம்மண்ணிலே ஓங்கி ஒலிக்கச் செய்தவர் அண்ணா என்பதைத் தமிழகம் அறியும். இன்றளவும் தமிழக மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைக் களங்கப்படுத்தும் முயற்சிக்குத் துரும்பளவு பலன்கூடக் கிடைக்காது. தமிழ்நாடு சமூக நீதிக்கும் சகோதரத்துவத்திற்கும் பெயர்பெற்ற சமத்துவ பூமி. இங்கே பிளவுவாத அரசியலைப் பா.ஜ.க எந்த வடிவத்தில், எந்த வேடத்தில் செய்தாலும் தமிழக மக்கள் அதை முறியடிப்பர். பா.ஜ.க.வின் இந்தப் பிளவுவாத அரசியலைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் துறை விசாரணையின் போது 24 பேர் உயிரிழந்திருப்பதாக, பெரும் அதிருப்தியோடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தற்போதைய மக்கள் விரோதத் திமுக ஆட்சியில், காவல் நிலையத்தில் பலர் மரணம் அடைவதைப் பார்க்கும் போது, அதிகாரத் திமிர் கொண்ட ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கெல்லாம் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

அண்மையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி சகோதரர் அஜித்குமார் அவர்கள், தமிழ்நாடு காவல் துறையினரால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாக நேர்மையற்ற முறையில் சாரி கேட்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக, காவல் துறை விசாரணையில் மரணம் அடைந்த 24 பேருக்காகவும் இவர் இதைப் போல சாரி கேட்பாரா? இவரது பொறுப்பற்ற, நிர்வாகத் திறனற்ற ( Irresponsible and Inability Administration ) தன்மைக்கு அப்பாவி மக்களும் இளைஞர்களும் பலியாகி வருகின்றனர். இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இவர் இருக்கக் கூடிய இண்டியா கூட்டணிக் கட்சிகள், ஒன்றிய அரசையும் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ-யையும் வன்மையாகக் கண்டிக்கின்றன. ஆனால் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல் துறையின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாமல், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுகிறார். தன் கீழ் இயங்கும் துறை மீது நம்பிக்கை இல்லாமல் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துறைக்கு வழக்கை மாற்றுகிறாரே, இது அவருக்குப் பெருத்த அவமானம் இல்லையா? தி.மு.க. பேசி வரும் மாநில சுயாட்சி முழக்கம் எங்கே போனது? மாநில சுயாட்சியையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க முடியாத தமிழ்நாடு உள்துறை அமைச்சர், தன்னை நம்பி வாக்களித்த மக்களைப் படுகுழியில் தள்ளி வருகிறார். இதற்கு அவர்களிடையே பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கத் திறனற்று, கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் உள்துறை அமைச்சர், தமிழ்நாட்டின் இந்த அவல நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, பொது மன்னிப்புக் கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அதில் மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்காய்வு (Caste Survey) நடத்த வேண்டியதில்லை என்றும் சொல்வது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏமாற்று வேலையன்றி வேறென்ன? அனைத்துச் சமுதாய மக்களின் சமூக, கல்வி, பொருளாதாரச் சூழல் குறித்த தெளிவான பார்வை இல்லாத கணக்கெடுப்பை எந்தச் சூழலிலும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்கவே ஏற்காது. இட ஒதுக்கீட்டுக்குக் கேடு விளைவிக்கும் இதுபோன்ற அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபடும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீராய்வு என்ற பெயரில் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்திலும் அநீதி இழைக்க முயல்கிறது. இது மட்டுமல்லாமல் ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று திட்டமிடுவதன் மூலம் ஜனநாயகமே கேள்விக்குறியாகும் நிலை உருவாகி உள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய எதேச்சதிகாரப் போக்கைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கான பதிலடியைத் தென்னிந்திய மக்கள், குறிப்பாக, தமிழக மக்கள், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவாகத் தருவார்கள் என்பதையும் எச்சரிக்கையாகத் த.வெ.க.வின் இச்செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.

ஜனநாயக அமைப்பில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும் அனைவரும் சமம். ஆனால், தற்போதைய ஆளும் கட்சியான கபட நாடகத் தி.மு.க.விற்கு எதிர்க்கட்சிகள் என்றாலே எதிரியாகப் பார்ப்பதுதான் வழக்கம். அதிலும் மாபெரும் மக்கள் சக்தியும் மக்கள் ஆதரவும் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்றாலே பயமும் மிரட்சியும்தான் மேலோங்கி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகப் பொதுக்கூட்டமோ, மக்கள் சந்திப்போ, பொது நிகழ்வோ, பொது வெளியிலும் தனியரங்குகளிலும் தனியார் இடங்களிலும் நடத்த அனுமதி தராமல், இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு தடுக்கிறது. இந்த அதிகாரத் திமிரின் உச்சமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கிளைக் கழகம் முதற்கொண்டு மாவட்டக் கழகம் வரை இருக்கும் அனைத்துப் பொறுப்பாளர் தோழர்களையும் மகளிர் அணியினரையும் காவல் துறையை ஏவித் தாக்கவும் பொய்வழக்குப் போட்டு மிரட்டவும் செய்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், கபட நாடகத் தி.மு.க.விற்குத் தோல்வியைப் பரிசளிப்பது உறுதி என்பதை உணர்ந்ததால்தான் இவ்வாறு செய்கின்றனர். எங்களுடைய வெற்றித் தலைவர் ஏற்கெனவே தெரிவித்தது போல எதை வேண்டுமானாலும் தடுக்கலாம், ஆனால் இயற்கையையும் மாபெரும் மக்கள் புரட்சியையும் எள்ளளவும் தடுக்க இயலாது. இதை ஜனநாயகத்திற்கு எதிரான போக்குடன் அதிகார மமதையில் ஆட்டம் போடும் தி.மு.க. அரசுக்கு நினைவூட்டுவதோடு, த.வெ.க.வை ஒடுக்க முயலும் தி.மு.க.வைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர். இவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார்.

இதில் கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17, 2025) உத்தரவிட்டுள்ளது.

கீழடி ஆய்வு முடிவுகள், அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலம் காலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும். வைகை நாகரிகம், சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. கீழடியின் பெருமையை மறைக்க, உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இச்செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Special Intensive Revision) நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, ஜனநாயகத்திற்கு எதிராக, சிறுபான்மையினர் வாக்குகளைக் குறைத்து, தங்களுக்குச் சாதகமான வாக்கு வங்கியை அதிகரிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

இந்தச் சந்தேகம் உண்மையெனில், இந்த நடவடிக்கையை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், இது போன்ற ஜனநாயக விரோதச் செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மேலும் 18 வயது நிறைவடைந்த, தகுதி உள்ள நபர் எவராக இருந்தாலும், வாக்களிக்கும் முழுமையான உரிமையை அவருக்குச் சட்டப்படி வழங்க வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே எங்கள் தமிழகத்தின் உறுதியான மொழிக் கொள்கை. நம் தமிழக வெற்றிக் கழகமும் அதையே உறுதியாகப் பின்பற்றுகிறது. ஆங்கிலத்தைப் பேசுவோர் அவமானப்படுவார்கள் என்று ஒன்றிய அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் கூறியது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மீது மறைமுகமாக ஏவப்படும் அஸ்திரம். உலகத் தொடர்பிற்காக ஆங்கிலத்தை இரண்டாவதாக ஏற்கும் தமிழ்நாட்டின் மீது மூன்றாவது மொழியாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் ஏற்காது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கையே இனிவரும் நூற்றாண்டுகளிலும் தொடரும். அதை ஒன்றிய பா.ஜ.க. மட்டுமன்றி, வேறு எவராலும் மாற்ற இயலாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகத்தின் இச்செயற்குழு உறுதிபடத் தெளிவுபடுத்துகிறது.

தமிழக மீனவர்களின் வாழ்வும் தொழிலும் போராட்டத்திலேயே தொடர்வதற்கு எப்போது விடிவு பிறக்கும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் இராமநாதபுரம் மீனவர்களின் 54 படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகு உரிமையாளருக்கு ₹1.20 கோடி அபராதமும், மற்றொரு படகோட்டிக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. இதர 12 மீனவர்களுக்குத் தலா ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே, நம் மீனவர்களிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளும் இலங்கை அரசு, தற்போது எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்று கூறி, மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் தமிழக மீனவர்களைச் சிறை வைக்கின்றது. அடிப்படை வாழ்வாதாரம் எப்படிக் குற்றமாகும் என்ற நம் மீனவர்களின் கேள்வி நியாயமானது.

மோசமான விதிகளைக் கையாண்டு வரும் இலங்கை அரசின் அடாவடி நடவடிக்கைகளை நிறுத்திட, மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, எங்கள் தலைவர் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியபடி, இடைக்காலத் தீர்வாக, இழந்த நம் கச்சத்தீவைக் குத்தகை அடிப்படையில் இந்தியா கேட்டுப் பெற வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.

கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்த்தொற்று ஏற்பட்ட காலங்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களுடைய குடும்பத்தைப் பிரிந்து, உயிரை ஒரு பொருட்டாகக் கருதாமல் மக்களைக் காப்பதே தங்களின் தலையாய பணி என அர்ப்பணிப்போடு சேவையாற்றினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்டப்படும் என்றும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அரசு மருத்துவர்களை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, வழக்கம் போல அனைத்துக் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டது போலவே அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டுள்ளார். இந்தியாவிலேயே ஊதியத்திற்காக மருத்துவர்களைத் தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், மருத்துவர்களின் பணியிடங்களை அதிகரித்து, அப்பணியிடங்களுக்குப் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவர்களின் இந்தக் கோரிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. உயிர் காக்கும் உன்னத சேவை புரியும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தர வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது.

அரசு எந்திரத்தின் அச்சாணியாக இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களைக் கைவிட்டனர். அப்போது, ஆட்சிக்கு வருவதற்காக, ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு மனசாட்சி இல்லாமல் அவர்களைக் கைகழுவி விட்டது. முன்பு ஆட்சியில் இருந்தோருக்கும் இப்போது ஆட்சியில் இருப்போருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவருமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றியவர்கள்தான். ஆட்சித் தலைமையின் குடும்ப நலனை மட்டுமே முக்கியமாகக் கருதும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசுக்குத் தமிழக மக்களின் குடும்ப நலன்களோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப நலன்களோ முக்கியமில்லை. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை, லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன் சார்ந்த போராட்டமாகத்தான் தமிழக வெற்றிக் கழகம் பார்க்கிறது. சமீபத்தில் நம் வெற்றித் தலைவரைச் சந்தித்த ஆசிரியர் சங்கத்தினரிடம் நம் வெற்றித் தலைவர் கூறியது போலவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்துக்குத் த.வெ.க. தனது முழு ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறது என்பதைக் கழகத்தின் செயற்குழு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

...

Select a resolution to view details

தமிழக வெற்றிக் கழகம்

இணைய

Footer background imageFooter background image
Party Flag
Thalaivar Vijay

கழக உறுப்பினராக உறுதிபூணுங்கள்

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையான செயல்திட்டத்துடன் இயங்குவதுதான் த.வெ.க. மக்களரசியலை மக்களுக்காக,மக்களோடு மக்களாக இணைந்து முன்னெடுக்கும் இயக்கத்தில் உங்கள் பங்களிப்பையும் உறுதிசெய்ய இப்போதே கழக உறுப்பினராகுங்கள்.

கழக உறுப்பினராக

தமிழக வெற்றிக் கழகம்

2026 - தேர்தல்

கழகம்

கட்டமைப்பு

தகவல்

மேலும்

2026 - தேர்தல்

கழகம்

கட்டமைப்பு

தகவல்

மேலும்

© 2025 தமிழக வெற்றிக் கழகம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
உருவாக்கியதுMinsky Logo
வெற்றி வேட்பாளர்கள்
தேர்தல் உத்தரவாதம்
வெளியீடுகள்
கழகம்
கொள்கைகள்
செயல்திட்டம்
தலைமைத்துவம்
மாவட்ட நிர்வாக அமைப்பு
சார்பு அணிகள்
குழுக்கள்
தீர்மானங்கள்
அறிவிப்பு
நிகழ்ச்சி
காட்சியகம்
தொடர்புக்கு
வெற்றி வேட்பாளர்கள்
தேர்தல் உத்தரவாதம்
வெளியீடுகள்
கழகம்
கொள்கைகள்
செயல்திட்டம்
தலைமைத்துவம்
மாவட்ட நிர்வாக அமைப்பு
சார்பு அணிகள்
குழுக்கள்
தீர்மானங்கள்
அறிவிப்பு
நிகழ்ச்சி
காட்சியகம்
தொடர்புக்கு