
கழகத்தின் வளம், அடித்தளம், உயிரோட்டம் மற்றும் புரட்சிகர பிரகடனங்களாகக் கொள்கைகள் இருக்கின்றன.


மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதார என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தைச் சுருக்காது, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி எல்லோர்க்கும் எல்லாமுமான சமநிலைச் சமூகம் உருவாக்குவது
ஜனநாயகம்

ஒரு நாட்டின் மக்களை, அவர்கள் சார்ந்த இனம், மதம், மொழி, சாதி, பாலினம் என்று பிரித்துப் பாகுபடுத்தாமல், சம உரிமைகளை அவர்களுக்கு உத்திரவாதப்படுத்திச் சாத்தியப்படுத்துவது. ஆட்சி அதிகாரம், சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படைச் சுதந்திர உரிமைகளைப் பறிக்கும் மாநில / ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது.
சமதர்ம சமூகநீதி

இட ஒதுக்கீடு அல்ல... விகிதாச்சார இடப் பங்கீடே உண்மையான சமூக நீதிக்கு வழி வகுக்கும். ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் காலக்கட்டம் வரை, அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துத் துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.
சமத்துவம்

சாதி, மதம், இனம், நிறம், மொழி, பொருளதாரம், வர்க்கம் மற்றும் பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை. எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே.
மதச்சார்பின்மை

மதச் சார்பற்ற, தனிப்பட்ட மத நம்பிக்கையிலும் தலையீடற்ற, அனைத்து மதத்தவரையும் மதநம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு ஆட்சி நிர்வாகம்.
மாநிலத் தன்னாட்சி (State Autonomy) உரிமை

மாநிலத் தன்னாட்சி உரிமையே அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை மாநிலத் தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்டல்.
இருமொழிக் கொள்கை

தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை. தமிழே ஆட்சிமொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி. தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
அரசியல் தலையீடு அற்ற அடிப்படை உரிமைகளை நிலை நாட்டும் நிர்வாகம்

அரசுத் துறை மற்றும் தனியார் துறை என்று எந்தத் துறையிலும் அரசியல் தலையீடு அற்ற லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகம் மத. இன, மொழி, வர்க்க பேதமற்ற வகையில் கல்வி, சுகாதாரம், தூய காற்று, தூய குடிநீர் என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை.
பகுத்தறிவுச் சிந்தனை மனப்பான்மை

மனித குலத்தின் உடல், மன, குண நலனுக்குக் கேடாக அமையும் வகையில் உள்ள பிற்போக்குச் சிந்தனைகளை நிராகரிப்பது.
தீண்டாமை ஒழிப்பு

பழைமைவாத பழக்க வழக்கங்களை நிராகரிப்பதே தீண்டாமை ஒழிப்பின் முதல் படி.
இயற்கைவளப் பாதுகாப்பு

சூழலியல் மற்றும் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய, இயற்கைக்கு ஊறு விளைவிக்காத பகுதிசார் மாநில வளர்ச்சிப் பரவலாக்கம்.
போதை இல்லாத் தமிழகம்

உற்பத்தித் திறன் / உடல் மற்றும் உள்ள நலன் கெடுக்கும், சமூகச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் போதை அறவே இல்லாத் தமிழகம் படைத்தல்.
அரசியலில் பலமான முதன்மை சக்தியாக இருக்கச் சிறந்த கொள்கைகள் தேவை. ஏனெனில், கொள்கைகளே அரசியலுக்கான ஆற்றல், வலிமை எல்லாம்.. அதற்கான துணையாகவும் வழிகாட்டியாகவும் கொள்கைத் தலைவர்கள் இருக்கிறார்கள்.






